
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சில தனியார் பேருந்து நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாளைக்குள் (அக்டோபர் 13) கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுக்க அக்டோபர் 20 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வெளியூரில் உள்ள மக்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணங்களைத் திட்டமிட்டு வருகிறார்கள். ரயில் முன்பதிவு முன்பே நிறைவடைந்துவிட்டது. அடுத்து அரசுப் பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சித்து வருகிறார்கள்.
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த முறையும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சில தனியார் பேருந்து நிறுவனங்கள் மீது மக்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர், தனியார் பேருந்துகள் திங்கள்கிழமைக்குள் பேருந்துக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"ஆம்னி பேருந்துகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே இரு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை அழைத்துப் பேசப்பட்டது. பேருந்து கட்டணத்துக்கு அவர்கள் நிர்ணயித்து வைத்திருந்த தொகையிலிருந்து குறைவான தொகையைப் பேசி, அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தத் தொகைக்கே அவர்களும் பேருந்துகளை இயக்கினார்கள். கடந்த தீபாவளி, பொங்கலின்போது எந்தப் பிரச்னையும் இல்லை.
கடந்த பூஜை விடுமுறையின்போது ஒரு சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த தகவலின் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, இந்த தீபாவளிக்குத் தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர்களை அழைத்துப் பேச, போக்குவரத்துத் துறை ஆணையர் காவல் துறையோடு இணைந்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவிருக்கிறார்.
இதற்கிடையில், 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிப்பதாக நேற்று தகவல் வந்தது. ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகளோடு நான் பேசியிருக்கிறேன். அவர்களும் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்குவதாதச் சொல்லியிருக்கிறார்கள்.
ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் உள்ள நிலையில், 10 நிறுவனங்கள் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளன. நாளைக்குள் அவர்கள் அந்தக் கட்டணத்தைக் குறைக்காவிட்டால், அந்தப் பேருந்துகள் மீது தீபாவளிக்கு முன்பாகவே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் எஸ்எஸ் சிவசங்கர்.
SS Sivasankar | Private Bus | Diwali |