
தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டண உயர்வுக்கு அனுமதிகோரி நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில், அரசுப் பேருந்து கட்டண உயர்வு குறித்து தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
அரியலூரில் இன்று (ஜூன் 3) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது,
`அரசுப் பேருந்து கட்டண உயர்வு இருக்காது என்பதை முதல்வர் தெளிவுபடுத்த சொல்லியிருந்தார். அந்த வகையில் ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம்.
இருந்தாலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடி, தங்களுக்குப் பேருந்து கட்டண உயர்வுவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்கு அறிவுரை வழங்கியது.
நீதிமன்றத்தின் அறிவுரைப்படியே பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இது அரசின் கருத்து அல்ல. அரசைப் பொறுத்தவரையில் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். அரசுப்பேருந்து கட்டணத்தை உயர்த்த எந்த எண்ணமும் கிடையாது. அதை நாங்கள் சொன்ன காரணத்தினால்தான் தனியார் பேருத்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கருத்துகேட்புக் கூட்டத்தில் பெறப்படும் கருத்துகள் நீதிமன்றத்தில்தான் சமர்பிக்கப்படும். அங்கே அரசின் கருத்தைக் கேட்கும்போது பொதுமக்களுக்கு சுமையில்லாமல் இதை எடுத்துச் செல்லவேண்டும் என்றுதான் வலியுறுத்தப்படும்.
ஏற்கனவே மின் கட்டண உயர்வு இருக்கும் என்ற செய்தி வந்தபோதும், கடந்த காலங்களில் அப்படி இருந்தது என்ற கருத்து வந்தபோதும், மின் கட்டணம் உயராது என்பதை தெளிவுபடுத்தினோம். எனவே அதே வகையில் நிச்சயமாக அரசுப் பேருந்து கட்டண உயர்வு இருக்காது’ என்றார்.