
ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களுடன் இன்று (பிப்.18) பேச்சுவார்த்தை நடத்திய தமிழக போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், ஆட்டோ கட்டண உயர்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
புதிய ஆட்டோ கட்டணங்களின் விரிவான பட்டியலை கடந்த மாதம் வெளியிட்ட அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு, பிப்.1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு தன்னிச்சையாக கட்டண நிர்ணய நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று தமிழக போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று (பிப்.18) பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர் சிவசங்கர். பேச்சுவார்த்தைக்கு பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்கு பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளைக் பகிர்ந்துகொண்டார்கள்.
கட்டண உயர்வை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச தூரத்தை மறு நிர்ணயம் செய்யவேண்டும், ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஆட்டோ ஓட்டுனர்களின் வருவாயில் பெரும்பங்கைப் பெறுவதை கட்டுப்படுத்தவேண்டும், பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்கள்.
கட்டண உயர்வு குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவரது ஆலோசனையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பைக் டாக்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதை அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.
கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் மீட்டர் பொருத்தும் பணிகள் தாமதமாகிப்போன காரணத்தால்தான் பிரச்னை ஏற்பட்டது’ என்றார்.