

தேமுதிக ஏற்கெனவே எதிர்க்கட்சியாக இருந்துள்ளது என்ற் அடிப்படையில்தான் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, தேமுதிக 10, விசிக 8, கம்யூனிஸ்ட்கள் தலா 5, மதிமுக 4, கொமதேக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 175 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் எஸ்டிபிஐ உட்பட சில சிறிய கட்சிகள் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் களமிறக்கப்பட உள்ளன.
எந்தெந்த தொகுதிகள் யார் யாருக்கு?
இதைத் தொடர்ந்து எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யப்பட திமுகவில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலைத் திமுகவிடம் கொடுத்துள்ளன. இந்நிலையில், தேமுதிகவுக்கும் காங்கிரஸுக்கும் மட்டும் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது ஏன் என்று அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
தேமுதிகவுக்கு அதிக இடங்கள் ஏன்?
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“அங்கீகரிக்கப்படாத தேமுதிகவுக்கு கூடுதல் இடங்களைக் கொடுத்துவிட்டு, விசிகவுக்குக் குறைவான இடங்களையே கொடுத்திருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு திருமாவளவன் ஏற்கெனவே தெளிவாக பதில் சொல்லிவிட்டார். காங்கிரஸ் பாரம்பரியமிக்க கட்சி, தமிழ்நாட்டை ஆண்ட கட்சி, அதனால் அதற்கான இடத்தைக் கொடுத்திருக்கின்றனர். அதேபோல, தேமுதிக ஏற்கெனவே எதிர்க்கட்சியாக இருந்த கட்சி. அதற்கான அங்கீகாரத்துடன் இடங்களை வழங்கியுள்ளனர். இதனால் விசிகவுக்கு எந்த மனவருத்தமும் இல்லை. நாங்கள் ஒவ்வொரு தேர்தலாக போட்டியிட்டு, அதனடிப்படையில் கூடுதல் இடங்களைப் பெற்று வருகிறோம். தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்று நாங்கள் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் பதில் அளித்திருக்கிறார்.
கூட்டணிக் கட்சிகளின் சுதந்திரம்
திமுக கூட்டணியில் கட்சிகள் அடிமையாக இருக்கிறது என்று விமர்சிக்கின்றனர். அப்படியென்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இத்தனை கட்ட பேச்சுவார்த்தை நடந்திருக்காது. அவர்கள் சுதந்திரமாக தங்களுக்குள் பேசி, அதன் முடிவுகளை திமுகவிடம் தெரிவித்து எங்கள் நிலைப்பாட்டைக் கேட்டு, அதன்பின் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவு எட்டப்பட்டிருக்கிறது. இதுவே கூட்டணிக் கட்சிகள் சுதந்திரமாக இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இடங்களைக் குறைத்துக்கொண்ட திமுக
திமுக கடந்த காலத்தில் நின்ற இடங்களிலிருந்து குறைத்துக் கொண்டு மற்ற கட்சிகளுக்கு இடங்களைக் கொடுத்துள்ளது. நிறைய புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி இருப்பதால் நாங்களும் குறைத்துக் கொள்கிறோம். கூட்டணிக் கட்சிகளையும் குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருக்கிறார். தேர்தலில் ஆட்சியமைக்க இத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிட வேண்டும் என்று ஒரு கணக்கு எங்களுக்கு இருக்கிறது. அதனடிப்படையிலேயே சில கட்சிகள் உதய சூரியனில் போட்டியிடுகின்றன. விசிக தங்கள் சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்” என்றார்.
Minister Sivashankar explained that the DMDK was allocated more seats on the basis that it was already an opposition party.