டாஸ்மாக் ஊழல் கற்பனையை நியாயப்படுத்தவே சோதனை: அமைச்சர் சு. முத்துசாமி

இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை - கோப்புப்படம்
அமலாக்கத்துறை சோதனை - கோப்புப்படம்ANI
1 min read

முன்பு நடைபெற்ற சோதனைகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான ஆதாரம் கிடைக்காத நிலையில், டாஸ்மாக் ஊழல் கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை மீண்டும் நடைபெறுவதாகக் கூறி தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனின் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (மே 16) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாகன் அழைத்துச் செல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இன்று (மே 17) மீண்டும் விசாகனின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக அமைச்சர் சு. முத்துசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`சென்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் தறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை அடிப்படையாகக்கொண்டு, திமுக ஆட்சியில் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதைப் போன்று சித்தரிப்பதற்காக, அரசியல் உள்நோக்கத்தோடு, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைகளை மேற்கொண்டது.

இந்த சோதனைகளின்போது, டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்தவிதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், ஆயிரம் கோடி ருபாய் ஊழல் நடைபெற்றதாக ஒரு கற்பனைச் செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. இவ்வாறு வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்துவதற்காக, அமலாக்கத் தறை டாஸ்மாக் நிறுவன அலுவலர்களைத் தொடர்ந்து துன்புறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிலருடைய வீடுகளில் சோதனைகளை அமலாக்கத் தறை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனைகளின்போதும், எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்தியும், கட்டாயப்படுத்தியும் வருகிறது.

பல அமலாக்கத்துறை வழக்குகளில், உச்சநீதிமன்றம் விதித்துள்ள வழிமுறைகளைத் தொடர்ந்து மீறி, இவ்வாறு அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கு, தமிழக அரசின் சார்பாக எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிராகத் தேவையான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, நமது அலுவலர்களுடன் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in