
திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நிலையை உதறிவிட்டு முழு நேர அரசியலில் உதயநிதி இறங்கினார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நேற்று (செப்.8) தமிழக மருத்துவத் துறை சார்பில் ரூ.28.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"இதே சைதாப்பேட்டையில் கடந்த 2018 துணை முதலமைச்சர் உதயநிதியிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். அப்போது, திரைத்துறையில் பிரபலமாக, உச்சபட்ச நட்சத்திரமாக இருக்கும் நீங்கள், அரசியலில் பங்களிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றேன். மேலும் இந்த விழா மேடையில் இருந்து நீங்கள் இறங்கும்போது நான் அரசியலுக்கு வருவேன் என்ற உறுதியை எனக்கு அளிக்க வேண்டும் என்று கூறினேன். அதன் பிறகு உதயநிதி பேசியபோது, மேடையில் இருந்து இறங்கும்போது உறுதி அளிக்க வேண்டும் என்று கூறினீர்கள் நான் முழுமையான அரசியலில் ஈடுபடுவேன் என்று முடிவெடுத்து விட்டு தான் இந்த மேடையில் ஏறி இருக்கிறேன் என்று உதயநிதி கூறினார். அந்த வகையில் சைதாப்பேட்டைக்கு பெருமை உண்டு" இவ்வாறு கூறினார்.
தமிழக 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் களம் காணும் நடிகர் விஜய், திரைத்துறை உச்சத்தை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று அவர் தரப்பில் தொடர்ந்து பேசப்படுகிறது. இந்த நிலையில், உதயநிதியும் திரைத்துறை உச்சத்தை உதறினார் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
Udhayanidhi | DMK | Ma. Subramanian | TN Politics | Vijay | TVK