

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிந்த்வரா மாவட்டத்தில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்டு 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் மத்திய பிரதேச காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருந்து நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இந்நிலையில், இருமல் மருந்து உயிரிழப்பு விவகாரம் குறித்து அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார். அவர் பேசியதாவது:-
“கடந்த அக்டோபர் 1 அன்று பிற்பகல் 3 மணியளவில் மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாட்டு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.
அன்றைய தினம் 4 மணிக்கு துணை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் உத்தரவின் பேரில் முதுநிலை மருந்து ஆய்வாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசு மருந்துகளைக் கொள்முதல் செய்யவில்லை. தனியார் மருந்துக் கடைகள் மட்டுமே மருந்துகளை வாங்கியுள்ளன.
அதனடிப்படையில் கோல்ட்ரிப் மருந்தை தனியார் யாரும் வாங்கி விற்பனை செய்யக் கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. அக்டோபர் 1,2 ஆகிய இரண்டு நாள்களில் மேற்கொண்ட ஆய்வில் மருந்தில் விதிமீறல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கோல்ட்ரிப் உள்ளிட்ட 5 மருந்துகள் சென்னைக்கு பகுப்பாய்விற்கு கொண்டு வரப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில், டை எத்திலீன் கிளைக்கால் 48.6 இருப்பது கண்டறியப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தான வேதிப்பொருள் என்பது தெரிய வந்தது.
கடந்த அக்டோபர் 7 அன்று மருந்து ஆய்வாளர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் வெளிப்புறமும் உரிமையாளர் வீட்டிலும் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்களிடமிருந்து கோல்ட்ரிப் இருமல் மருந்தின் மொத்த இருப்பும் அக்டோபர் 8 அன்று பறிமுதல் செய்யப்பட்டது. அக்டோபர் 1 முதல் 8-க்குள் இவ்வளவு வேலை நடந்திருக்கிறது.
மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள சி2 சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாடு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது. அக்டோபர் 9 அன்று மத்திய பிரதேசத்தில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் வருகை தந்து, சென்னை அசோக் நகர் பகுதியில் இருந்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்த நிறுவனம் கடந்த 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அந்த நிறுவனம் சிறு சிறு குற்றங்களுக்காக பலமுறை தண்டிக்கப்பட்டிருக்கிறதுஅந்த நிறுவனம் 2011-ல் வந்தது. அக்டோபர் 27 2011 அன்று அந்நிறுவனத்திற்கு அதிமுக ஆட்சி காலத்தில்தான் உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது.”