மகளிர் உரிமைத் தொகை கோரி அளிக்கப்பட்ட மனு பலருக்கு நிராகரிக்கப்பட்டுள்ள காரணம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று (டிச. 12) முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது சுமார் 17 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் வருகை தந்து, அம்மாவட்டத்தில் உள்ள பயனாளர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை வழங்கினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-
“ஏற்கெனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்க விழா நேற்று நடைபெற்றது. அதன் மூலம் 17 லட்சம் பேருக்குக் கூடுதலாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தளவில் முதற்கட்டமாக 1.11 லட்சம் பேருக்குக் கொடுத்திருந்தோம். இப்போது 67,551 மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுள்ள 38,263 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சொன்ன வாக்குறுதியைக் காப்பாற்றுபவர். அதனால் மக்களும் தாய்மார்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தளர்வுகள் கொடுக்கப்பட்ட போதும் சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களாக இருக்கலாம். தகுதி உடையவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. வசதி படைத்தவர்கள் நீக்கப்பட்டு, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கும் தகுதியானவர்களுக்கும் நிறைவாக வழங்கியிருக்கிறோம். தற்போதும் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் விண்ணப்பிக்கலாமா என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். நிராகரிக்கப்பட்டவர்கள் வட்டார அலுவலரிடம் மேல்முறையீடு செய்யலாம். அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டும். பொதுமக்களின் குறைகளைக் கனிவோடு கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்யும் வழியைச் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
Minister K.K.S.S.R. Ramachandran has explained the reasons why the applications submitted for the Magalir Urimai Thogai have been rejected for many.