ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஜனவரிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியது தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். அருப்புக்கோட்டை தொகுதிக்குள்பட்ட இடங்களில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், கலையரங்கம் உள்ளிட்டவற்றைத் திறந்து வைத்தார்.
இதுதொடர்புடைய நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், "மகளிர் உரிமைத் தொகை (மாதம் ரூ. 1,000) சிலருக்கு வழங்கப்படாமல் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். ஒரு ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கொடுக்கப்படும். இரு மாதங்களுக்குப் பிறகு இதற்காகப் பட்டியல் தயாரிக்கவுள்ளோம். ஜனவரிக்கு மேல் இந்தப் பட்டியலைத் தயாரித்து ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கவுள்ளோம். ரூ. 1,000 என்பது ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து சேரும். இதற்கு முதல்வர் ஒப்புக்கொண்டுவிட்டார். இதை ஜனவரிக்கு மேல் வைத்துக்கொள்வோம் என்றிருக்கிறார்கள்" என்றார்.
இந்த அறிவிப்பால், ஜனவரிக்குப் பிறகு அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தோற்றம் உருவானது. இந்த நிலையில் ரேஷன் அட்டை வைத்துள்ள தகுதியுடையப் பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தங்களுடைய ரேஷன் கார்டு அடிப்படையில் விண்ணப்பித்துள்ள அனைவருடைய விண்ணப்பங்களையும் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களில் ஒருவர் கூட விடுபடாத அளவில் வழங்கிட வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசின் இலக்காகும்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆலோசனைகளைப் பெற்று ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என இன்று விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சியில் மக்களிடம் உறுதியளித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.