இலவச வேட்டி சேலை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியதற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலை திட்டத்தின் வழியாக மாநில கைத்தறித் துறையில் மெகா ஊழலை அமைச்சர் காந்தி செய்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அமைச்சர் காந்தி இதற்கு இன்று மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.
"முதல்வர் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு துறையிலும் சீரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கைத்தறி தொழிலின் வளர்ச்சி மற்றும் நெசவாளர்களின் நலனுக்காக இவ்வரசு சீரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து பேணி பாதுகாத்து வருகிறது.
மேலும், அரசு அலுவலர்களின் பணியிடமாற்றமானது நிர்வாகக் காரணங்களின் பொருட்டு மேற்கொள்ளப்படும் வழக்கமான நடைமுறை ஆகும். பல இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுக்குப் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்" என்று அமைச்சர் காந்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.