
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8 அன்று வெளியாகின. அதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து சர்ச்சை கிளம்பியது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 16) தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`எங்கள் பிள்ளைகள் தேர்வெழுதுகிறார்கள்; எங்கள் ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்கள். ஆனால் அதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை. சந்தேகங்கள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. நம்மை நாமே பெருமையாகப் பேசிக்கொள்ளமாட்டோம், பொதுவாகவே அது எப்போதும் இருப்பதுதான்.
இது தொடர்பான விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள நினைப்பது மகிழ்ச்சிதான். இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்தாண்டு பெற்ற மதிப்பெண்களை யாராவது பார்த்தீர்களா? 91 முதல் 99 வரையிலான மதிப்பெண்களை இந்த பள்ளியைச் சேர்ந்த 104 மாணவர்கள் எடுத்துள்ளனர். அது குறித்த விவரங்களை ஏன் செய்தியாளர்கள் சேகரிக்கவில்லை?
வேதியியலில் நூற்றுக்கு நூறு பெற்ற அதே 167 மாணவர்கள், இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களிலும் 90 முதல் 98 வரையிலான மதிப்பெண்களை எடுத்துள்ளார்கள். செய்தியாளர்கள் கூறுவதை எப்போதும் நாங்கள் கவனத்தில் கொள்வோம்.
அவர்கள் நம் மீது சந்தேகப் பார்வையை திருப்பிவிட்டார்கள், ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டார்கள் என்பதால் நேற்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவு குறித்தும், அந்த தேர்வு மையத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட்டது.
167 மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்கியதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் எனும் பட்சத்தில், அந்த வழியைப் பின்பற்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் நூற்றுக்கு நூறு வாங்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறியிருக்கிறேன்’ என்றார்.