சென்னை தலைமை செயலக கட்டத்தில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ. வேலு, அரசு ஊழியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று பேட்டியளித்துள்ளார்.
இன்று (அக்.24) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தின் தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்த அரசு அலுவலர்கள் அனைவரும் கட்டடத்திலிருந்து வெளியேறினர்.
இதனை தொடர்ந்து விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்ட முதல் தளத்தை ஆய்வு செய்தார் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு. அதன்பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:
`நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடம் 1974-ல் திறக்கப்பட்டது. இதன் முதல் தளத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறை செயல்பட்டுவருகிறது. இதில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது என்று கூறப்பட்டதை அடுத்து அங்கிருப்பவர்கள் அனைவரும் கீழ் தளத்துக்கு வந்துவிட்டனர். எனக்குத் தகவல் கிடைத்தவுடன் அங்கே சென்று பொறியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டேன்.
கட்டடத்தின் உறுதித் தன்மை உருகுலையவில்லை. கட்டடம் உறுதியாக உள்ளது. தரைத்தளத்தில் 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைல்ஸ் பதிக்கப்பட்டது. நாளாக நாளாக டைல்ஸ் பதிக்கப்பட்ட இடத்தில் ஏர் கிராக் ஏற்படும். அவ்வாறு ஏர் கிராக் ஏற்பட்டதை கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டதாக கருதி அலுவலர்கள் வெளியேறியுள்ளனர்.
பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர், தலைமைச் செயலகத்தின் நிர்வாக பொறியாளர், மேற் பொறியாளர்கள் என அத்தனை பேரும் சோதனை செய்ததில் இந்த கட்டடம் உறுதியுடன் இருப்பது தெரியவந்துள்ளது. இன்றைக்கு அல்லது நாளைக்கு அந்த இடத்தில் புதிய டைல்ஸ் பதிக்கப்படும். யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை’ என்றார்.