

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவைச் சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் வேலை வாங்கித் தருவதாக அமைச்சர் கே.என். நேரு மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் 27 அன்று காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை கடிதங்கள் அனுப்பியது. ஆனால் அதன்மீது காவல்துறை தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அமலாக்கத்துறையின் கடிதங்கள் மீது காவல்துறையை நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி. இன்பதுரை உட்பட பல்வேறு தரப்பினரால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் விசாரணை
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடைபெற்று வந்தது. இது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு குற்றவியல் வழக்கைப் பதிவு செய்ய அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்கியுள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும் போது பல மாதங்கள் ஆகியும் விரிவான விசாரணை என்ற பெயரில் கால தாமதமாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்க
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் ஆகியோர் வாதிட்டனர். அமலாக்கத்துறை சார்பில் வழக்கறிஞர் என். ரமேஷ் ஆஜராகி வாதிட்டார். அப்போது, “அமலாக்கத்துறை வழங்கியது வெறும் தகவல் மட்டுமல்ல, அவை அனைத்தும் மிக முக்கியமான ஆதாரங்கள்” என்று எடுத்துரைத்தார். இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், “அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ள ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே வழக்குப்பதிவு செய்வது அவசியமானது” என்று உத்தரவிட்டுள்ளது.
சட்ட ரீதியாகச் சந்திக்கத் தயார்
இதைத் தொடர்ந்து சென்னை அறிவாலயத்தில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:-
“அந்த வழக்கே மிகவும் தெளிவற்றது. பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வங்கி கடன் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அது நடந்து கொண்டிருக்கும்போதே அமலாக்கத்துறை சோதனை நடத்தி, சில ஆவணங்களை எடுத்ததாகச் சொன்னார்கள். அதன்பிறகு சிபிஐ தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய அமைச்சர் நேரு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதுதான் முதன்மை வழக்கு. அதன்பேரில் அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அமலாக்கத்துறையிடம் ஏதாவது ஆதாரம் இருந்திருந்தால் அவர்களே நடவடிக்கை எடுத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதம்தான் அனுப்பியது. அதையும் முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவின் மூத்த தலைவர், அமைச்சர் என்றும் பாராமல் உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி தற்ஓது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தற்போது கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூட தொடுத்திருக்கிறார். அதையெல்லாம் வென்று காட்டியவர்தான் கே.என். நேரு. தற்போது வந்துள்ள உத்தரவைச் சட்டரீதியாகச் சந்தித்து, தவறூ என்று நிரூபிக்க திமுக சட்டத்துறை தயாராக இருக்கிறது” என்றார்.
Minister K.N. Nehru said that we will legally meet the High Court's order to register a First Information Report based on the Enforcement Directorate's letter in the case of fraud involving the promise of government jobs.