மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி: சென்னையில் இருந்து விமான புறப்பாடு ரத்து!

கேரளத்தின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலையம் - கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் - கோப்புப்படம்ANI
1 min read

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தால் சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பை சந்தித்துள்ளது. கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளின் வான்வெளி மூடல் நடவடிக்கையால், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அந்நாடுகளுக்குச் செல்லும் விமானங்களின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரானிய இராணுவ தளங்கள் மீதான அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 23) இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இத்தகைய நடவடிக்கைகள், உலகளாவிய விமானப் போக்குவரத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளன.

இதன் நேரடியாக விளைவாக, இன்று (ஜூன் 24) சென்னையில் இருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு செல்லவிருந்த மற்றும் அங்கிருந்த சென்னைக்கு வரவிருந்த 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மிகவும் குறிப்பாக, சென்னையில் இருந்து குவைத், மஸ்கட், அபுதாபி, தோஹா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருந்த இண்டிகோ, கத்தார் ஏர்வேஸ் விமானங்களும் தோஹா, குவைத் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவிருந்த கத்தார் ஏர்வேஸ், இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் தொடர்ந்தால், விமானப் போக்குவரத்திற்கான இடையூறுகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்குச் செல்ல அல்லது அங்கிருந்து வேறு இடங்களுக்குப் பயணிக்கத் திட்டமிடும் பயணிகள், விமான நிலையங்களுக்கு செல்வதற்கு முன்பு, விமானங்களின் நிலை குறித்து அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதாக தி நியூஸ் மினிட் வெளியிட்ட செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமல்லாமல், கேரளத்தின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இருந்தும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், இஸ்ரேல் ஈரானுக்கு இடையே போர் நிறுத்த அறிவிப்பு அமலுக்கு வந்துள்ளதால் நிலைமை விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in