
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
சென்னையில் நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தெரு நாய்கள் கடிப்பதால் மக்கள் ரேபிஸ் உள்ளிட்ட நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில், வெளிநாட்டு நாய் வகைகளான பிட்புல், ராட்விலர், ஜெர்மென் ஷெப்பர்ட் உள்ளிட்ட இனங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வளர்ப்பு நாய்களுக்குப் பல முக்கிய விதிகளை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.
பொது வெளியில் அழைத்துச் செல்லும்போது வாய்மூடி அணிவிக்க வேண்டும். கழுத்துப் பட்டை அணிவிக்க வேண்டும். முறையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மாநகராட்சியிடமிருந்து உரிமம் பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
மேலும், நாய்களைப் பராமரிக்க முடியாமல் பலர் தெருக்களில் விட்டுவிடும் நிலையைக் கட்டுப்படுத்தும் வகையில், வளர்ப்பு நாய்களின் உடல்களில் மைக்ரோ சிப் பொருத்தப்பட வேண்டும் என்று மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்த தீர்மானம் கடந்த ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மைக்ரோ சிப் கொள்முதல், சிப் செயலி உருவாக்கம் போன்ற பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபர் மாதம் சென்னையில் அனைத்து வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் பொருத்தப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில், வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும்போது மைக்ரோ சிப்களைப் பொறுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைக்ரோ சிப் பொருத்தப்படாத நாய்களின் உரிமையாளருக்கு ரூ. 3,000 அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
Chennai | Pet Dogs | Microchips for Pets | Chennai Pet Owners