
டெல்டா பாசனத்துக்காக இன்று (ஜூலை 28) பிற்பகல் 3 மணிக்கு மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு,க. ஸ்டாலின் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் பிற்பகல் 3 மணிக்கு டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற தகவலை செய்திக்குறிப்பின் வாயிலாக வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேட்டூர் அணையிலிருந்து முதற்கட்டமாக 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும். பின்னர் நீர்வரத்தைப் பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் படிப்படியாக திறக்கப்படும் நீரின் அளவு உயர்த்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் டெல்டா பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிருக்கான பாசனத்தைக் கருத்தில் கொண்டும், ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ளது என்றும் செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ண ராஜ சாகர், கபினி ஆகியவை நிரம்பின. இதை அடுத்து கர்நாடக அணைகளிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 27-ல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரத்தின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டியது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நேற்று மாலையில் இருந்து விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடி வீதம் காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது.