மெத்தனால் எங்கிருந்து வந்தது?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

"குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்."
மெத்தனால் எங்கிருந்து வந்தது?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து 47 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மெத்தனால் புதுச்சேரியிலிருந்து கொண்டு வரப்பட்டதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்ததாவது:

"நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டத்தில் கருணாபுரத்தைச் சேர்ந்த 47 நபர்கள் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அருந்தியதால், உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்த துயரமான சம்பவத்தை அறிந்து நானும் மிகுந்த வேதனையடைகிறேன். இந்தப் பேரவையில் உயிரிழந்தவர்களுக்கு நாம் அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறோம்.

உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உறவினர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணாபுரம் சம்பவத்தைப் பொறுத்தவரை, காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தை அருந்தியதால், பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் கிடைத்தது.

உடனடியாக, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அவசர மருத்துவ உதவிகளைச் செய்திட வலியுறுத்தினேன். மருத்துவப் பணிகளை விரைவுபடுத்திட கூடுதலாக 57 அரசு மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். போதுமான செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்களும் கள்ளக்குறிச்சி அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே உள்ள மருத்துவர்களுடன் இணைந்து இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். சிகிச்சைப் பயன்படுத்தக்கூடிய உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காக்க, அந்த மருந்துகள் வெளிச்சந்தையில் வாங்கியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாகச் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 47 நபர்கள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். 66 நபர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 32 நபர்கள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 2 விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 16 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவிந்தராஜ் (எ) கண்ணுக்குட்டி என்பவர் காவல் துறையினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாமேதரன், மதன், விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

புதுச்சேரியிலிருந்து மெத்தனால் கொண்டு வரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

அமைச்சர்கள் மட்டுமில்லாமல் உள்துறைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோரையும் நேரில் செல்லுமாறு அறிவுறுத்தினேன். அவர்களை விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன் அதன் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன்.

இந்தச் சம்பவம் குறித்து தீர விசாரிக்கவும், அதன் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைத்தேன்.

கடந்தாண்டு மே மாதம் இதுபோன்று நடந்த சம்பவம் தொடர்புடைய வழக்கும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கு இரு மாவட்டங்கள் தொடர்புடையது. விழுப்புரம் வழக்கைப் பொறுத்தவரை 21 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 8 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். காவல் துறையினர் 16 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் கள்ளச்சாராயத்தைத் தயாரிக்க மெத்தனால் ஆந்திர மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிந்து இறுதி அறிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வழக்கைப் பொறுத்தவரை 6 வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள். 6 காவல் துறை அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். இதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ. 10 லட்சம் நிவாரண நிதியுடன் கூடுதல் நிவாரணங்கள் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ, ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும்.

பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயதை நிறைவு செய்யும் வரை மாதப் பராமரிப்புத் தொகையாக தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

பெற்றோர் இருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களுடையப் பெயரில் தலா ரூ. 5 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிலையான வைப்புத் தொகை வைக்கப்படும். அவர்கள் 18 வயதைப் பூர்த்தி செய்தவுடன் இந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்துவாடும் குழந்தைகளுக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்துவாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

நடைபெற்ற சம்பவத்துக்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் என இங்கு (சட்டப்பேரவை) பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல, முதல்வர் என்ற முறையில் இந்தப் பிரச்னையிலிருந்து நான் ஓடி ஒளிபவன் அல்ல. பொறுப்பை உணர்ந்த காரணத்தால்தான் பொறுப்புடன் பதிலளித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in