காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுக்கும், பிரபல நடிகை மேகா ஆகாஷுக்கும் இன்று (செப்.15) திருமணம் நடைபெற்றது.
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2019-ல் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் கதாநாயகியாக நடித்துக் கவனம் பெற்றவர் மேகா ஆகாஷ். இதன்பிறகு பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ், கடைசியாக, மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 23-ல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சு. திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவுடன் தனக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாக அறிவித்தார் மேகா ஆகாஷ். இந்த இருவரும் இணைந்து 2020-ல் வெளியான குறும்படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள்.
மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணுவின் திருமணம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.