பிரதருடனான சந்திப்பு இனிமையாக இருந்தது என தில்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தில்லியில் இன்று (செப்.27) காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். இதை தொடர்ந்து தில்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டி பின்வருமாறு:
`இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். இது ஒரு இனிய சந்திப்பாக இருந்தது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை, பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கைகளில் இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டிய மூன்று முக்கியக் கோரிக்கைகளை நான் அவரிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.
முதலாவது, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்ட பணியை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து செயல்படுத்தியதைப் போல இரண்டாம் கட்டப் பணியையும் செயல்படுத்த வேண்டும். 2019-ல் மாநில அரசின் நிதி மற்றும் கடன் உதவியுடன் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
பிறகு மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு 2020-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என்று 2021-2022 மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார் மத்திய நிதியமைச்சர்.
2022-ல் மத்திய அரசின் திட்ட முதலீட்டு வாரியமும் இதற்கான ஒப்புதலை அளித்தது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக இதுவரை ரூ. 18,564 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் நிதி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தாமதமின்றி நிதியை வழங்குமாறு நான் கேட்டிருக்கிறேன்.
இரண்டாவது, மத்திய அரசு 60 சதவீத நிதியையும், தமிழக அரசு 40 சதவீத நிதியையும் வழங்கி செயல்படுத்தக்கூடிய ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில் மத்திய அரசு வழங்க வேண்டியது ரூ. 2152 கோடி நிதி. இந்த நிதியில் முதல் தவணை இதுவரை தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை. தேசியக் கல்விக்கொள்கையின் பல நல்ல கூறுகளை தமிழக அரசு ஏற்கனவே செயல்படுத்தியிருக்கிறது.
காலை உணவுத்திட்டத்தைப் போல பிற மாநிலங்களில் செயல்படுத்தபடாத பல முன்னொடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு விதிமுறையான மும்மொழிக் கொள்கை பின்பற்ற தமிழகம் விரும்பவில்லை. மத்திய அரசு நிதி வழங்காததால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காமல் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடியாக இந்தத் திட்டத்துக்கு நிதி அளிக்குமாறு வலியுறுத்தினேன். மூன்றாவதாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள் குறித்து விரிவாக பிரதமரிடம் கூறியிருக்கிறோம். மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்தி அங்கு உள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்துத்தருமாறு பிரதமரிடம் கேட்டிருக்கிறேன்’ என்றார்.