பாமக நிறுவனர் தலைமையில் நடைபெற்ற கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல என பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கே. பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், இருவரும் தனித்தனியாகப் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்கள்.
கடந்த ஆகஸ்ட் 9 அன்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில், அன்புமணியின் பொதுக்குழுவுக்குத் தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில், பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் தொடர்வார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 37 தீர்மானங்கள் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன. வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கான அதிகாரம், நிறுவனர் ஒப்புதல் இல்லாமல் பாமக பொதுக்குழுவை நடத்த முடியாது எனப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், பாமகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சார்பில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி பரிந்துரை செய்யப்பட்டது. இறுதியில் பேசிய ராமதாஸ், அன்புமணியை பெயரையே உச்சரிக்காமல் உரையாற்றிச் சென்றார். தொண்டர்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்றார் ராமதாஸ்.
இந்தப் பொதுக்குழு நிறைவடைந்த பிறகு, அன்புமணி தரப்பு சார்பாக பாமக செய்தித் தொடர்பாளரும் அன்புமணி ஆதரவாளருமான வழக்கறிஞர் கே. பாலு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கே. பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"பாமக கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாமக பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பாமக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9 அன்று மாமல்லபுரத்தில் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட கூட்டம் பாமக பொதுக்குழுக் கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் எதுவும் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
PMK | K. Balu | K Balu | Ramadoss | PMK | Anbumani Ramadoss | PMK General Body Meeting | PMK General Body Meet |