
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள மாநில மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என பேட்டியளித்துள்ளார் கேரள அரசு அதிகாரி.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல புற்று நோய் மையத்திலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சில தினங்களுக்கு முன்பு கொட்டப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே. சத்யகோபால் அமர்வு இது தொடர்பான விசாரணையில் நேற்று (டிச.19) ஈடுபட்டது.
இதில் ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் `கேரள மருத்துவக் கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது தொடர்கதையாகிவிட்டது. ஏற்கனவே நாங்குநேரியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றியதற்கான தொகையை இன்னும் கேரள அரசு தரவில்லை. எனவே தற்போது கொட்டப்பட்டுள்ள கழிவுகளை கேரள அரசே அகற்ற உத்தரவிடவேண்டும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழக்கறிஞரும் தம் கருத்துகளை தெரிவித்தார். இதனை அடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை 3 நாட்களுக்குள் கேரள அரசு அகற்றவேண்டும் என உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை டிச.23-க்கு ஒத்திவைத்து பசுமை தீர்ப்பாய அமர்வு.
இந்நிலையில், திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் கேரள அரசு அதிகாரிகள் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கேரள அதிகாரி, `மருத்துவக் கழிவுகள் அபாயகரமானதாக இல்லை, அதில் சோதனைக்குப் பயன்படும் மாதிரிகளே அதிகமாக உள்ளன. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கழிவுகளை அகற்ற குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.