
ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளில் வழக்குகள் பதியப்பட்டு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவலளித்துள்ளார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
பள்ளி மாணவர்களிடம் பாலியல் ரீதியாக ஆசிரியர்கள் அத்துமீறும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் இன்று (பிப்.13) ஆலோசனை நடத்தினார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
`பொதுத் தேர்வுகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து இந்தக் கூட்டத்தில் நாங்கள் ஆலோசனை மேற்கொண்டோமோ, அதேபோல ஆசிரியர்கள் மீதான போக்சோ வழக்குகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டோம். மாணவர்கள் மனசு பெட்டி மற்றும் 14417 உதவி எண் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அச்ச உணர்வு இல்லாமல் மாணவர்கள் புகாரளித்து வருகிறார்கள்.
தலைமை ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, மாவட்ட அளவிலான பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களாக இருந்தாலும் சரி, ஒரு புகார் கிடைத்தவுடன் காலதாமதம் இல்லாமல் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இது தொடர்பாக உடனடியாக ஒரு வரைவு செயல்பாட்டு முறையை உருவாக்கத் தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
2-3 நாட்கள் அது இறுதி செய்யப்பட்ட பிறகு, அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். தவறுகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒரு புறம் என்றால், இனி இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருப்பதற்காக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
கல்வியாண்டின் தொடக்கத்தில் என்.ஜி.ஓ.க்கள், காவல்துறை நண்பர்கள், சமூக நலத்துறை மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கூடுதலாக, இது போன்ற தவறுகள் நிகழும்போது அதை தெரிவிப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
238 போக்சோ வழக்குகள் இதுவரை பதியப்பட்டுள்ளன. அதில் 11 பேர் குற்றமற்றவர்களாக நிரூபிக்கப்பட்டு பணியில் இணைந்துள்ளார்கள், வேறு சிலர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள், மார்ச் மாதத்தில் 56 பேருக்கு இறுதி உத்தரவு வரப்போகிறது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த பள்ளியைச் சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.