ஓபிஎஸ்-க்குப் பலாப்பழம், விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னங்கள் ஒதுக்கீடு

மதிமுக திருச்சி தொகுதியிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னங்கள் ஒதுக்கீடு
விசிகவுக்கு பானை, மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னங்கள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு தீப்பெட்டிச் சின்னத்தையும், விசிகவுக்கு பானை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளரான வைகோவின் மகன் துரை வைகோ அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் மதிமுகவின் சின்னமாக இருந்த பம்பரம் சின்னத்தை தங்களுக்கு வழங்கக்கோரி, வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என மின்னஞ்சல் மூலம் தலைமைத் தேர்தல் ஆணையம் பதில் அளித்தது.

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து மதிமுக தாக்கல் செய்த வழக்கில், “மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடமுடியாது” என்று கூறி சென்னை உயர் நீதிமன்றம் மதிமுக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் மதிமுகவுக்கு தீப்பெட்டிச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அதேபோல திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில் தங்களுக்குப் பொது சின்னமாக பானை சின்னத்தை வழங்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக மனு அளித்தது.

இதன் பிறகு “கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில் குறைந்தபட்சம் 1 சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே பொதுச் சின்னம் வழங்க முடியும். எனவே, விசிகவுக்கு பானை சின்னம் வழங்க இயலாது” என்று தேர்தல் ஆணையம் கூறியது.

இந்நிலையில், விசிகவுக்குப் பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில் பானை சின்னம் கேட்டு விசிக சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே போட்டியிட்டு 1.16 சதவீத வாக்குகள் பெற்றள்ளதைக் குறிப்பிட்டு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது விசிகவுக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

ஆனால், சிதம்பரத்தில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், விழுப்புரத்தில் போட்டியிடும் ரவிக்குமாருக்கு இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை.

மேலும், ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in