மழைநீர் கால்வாயில் விழுந்து ஒருவர் உயிரிழந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன்.
சென்னை கே.கே.நகரில் அம்பேத்கர் குடிசைப் பகுதி சாலையையும், ஜவஹர்லால் நேரு சாலையையும் இணைக்கும் பகுதியில் பாதாள சாக்கடை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால் அந்தப் பகுதியில் பெரிய அளவில் குழி தோண்டப்பட்டு அதைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் மழை பெய்துவந்த நிலையில், அந்தக் குழியில் மழைநீர் நிரம்பியது. நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற நபர் மதுபோதையில் தடுப்பு வேலி அருகே நடந்து சென்றபோது நிலை தடுமாறி குழிக்குள் விழுந்து உயிரிழந்தார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மேயர் பிரியா ராஜன், `சென்னை மாநகராட்சியின் சில பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த சம்பவத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அந்தப் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. அந்தத் துறை அதிகாரிகளிடம் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் சரியான முறையில் தடுப்பு வேலி அமைக்க அறிவுறுத்தியுள்ளோம்’ என்றார்.
இந்த சம்பவத்துக்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, `சென்னையில் மழைநீர் வடிகால் குழியில் விழுந்து இளைஞர் உயிரிழந்ததற்கு நிர்வாகச் சீர்கேடே காரணம்’ என்றார்.