சென்னையில் மழைநீர் வடிகால்களில் கொசுக்களுக்காக வலை போடப்படவில்லை: மேயர் பிரியா ராஜன் விளக்கம் | Priya Rajan |

மழைநீர் வடிகால்களுக்கு கொசு வலை போர்த்திய பணிகள் சமூக ஊடகங்களில் சர்ச்சையான நிலையில் விளக்கம்...
மேயர் பிரியா ராஜன் (கோப்புப்படம்)
மேயர் பிரியா ராஜன் (கோப்புப்படம்)படம்: https://twitter.com/PriyarajanDMK
1 min read

மழைநீர் வடிகால்களில் கொசுவலை போடுவது தொடர்பான எந்த அறிவிப்பையும் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிடவில்லை என்று மேயர் பிரியா ராஜன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதால் பெருநகர சென்னை மாநகராட்சி இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. மாநகர் முழுவதும் கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழைநீர் வடிகால்களில் கொசுவலை

இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகள் கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகும் இடங்கள் என்று கருதப்படும் மழைநீர் வடிகால்களின் மூடிகளில் கொசு வலையைப் போர்த்தி, உள்ளிருந்து கொசுக்கள் வெளியில் வராதபடி மூடும் பணியைக் கடந்த சில நாள்களுக்கு முன் மேற்கொண்டனர். குறிப்பாக வடசென்னையின் திருவொற்றியூர், திரு.வி.க. நகர் மண்டலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இப்பணிகள் நடத்தப்பட்டன. மழைநீர் வடிகால்களில் உள்ள சிறு துளைகள் வழியாக கொசுக்கள் வெளியில் வராமலிருக்க கொசு வலைகள் போடப்பட்டதாகவும், இப்பணிகள் விரைவில் மாநகரம் முழுவதும் விரிவாக்கப்படும் என்றும் அப்போது கூறப்பட்டதாகத் தெரிகிறது.

சமூக ஊடகங்களில் விமர்சனம்

இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வடிகால்களைக் கொசு வலையால் மூடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் விளக்கமளித்துள்ளார்.

மேயர் பிரியா விளக்கம்

சென்னை புளியந்தோப்பில் மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருவொற்றியூரில் மழைநீர் வடிகாலுக்குக் கொசுவலை போர்த்தப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறியதாவது: ”சென்னை மாநகராட்சி இப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அது கொசுக்களுக்காக போடப்பட்ட வலை இல்லை. அப்பகுதி மாமன்ற உறுப்பினர் கொடுத்த யோசனையின் பேரில் இந்த செயலை செய்திருக்கிறார்கள். அது இவ்வளவு விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டிய விஷயம் இல்லை” என்றார்.

Summary

Mayor Priya Rajan has clarified that the Greater Chennai Corporation has not issued any notification regarding the installation of mosquito nets in stormwater drains.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in