
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு, தஞ்சை சரக டிஐஜி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் 2024 முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சுந்தரேசன் பணிபுரிந்து வருகிறார். சட்டவிரோதமாக மது, சாராயம் கடத்தலில் ஈடுபடுவோர் மீது இவர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், துறைரீதியாக வழங்கப்பட்டிருந்த வாகனம் பறிக்கப்பட்டதால் தனது அலுவலகத்திற்கு இவர் நடந்தே சென்ற காணொளி சமூக வலைதளங்களில் நேற்று (ஜூலை 17) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சுந்தரேசன் கூறியதாவது,
`கடந்த 5-ம் தேதி அமைச்சரின் பாதுகாப்புப் பணிக்காக எனது வாகனத்தை மாவட்ட காவல்துறை தரப்பில் கேட்டார்கள். எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தால் வாகனத்தை வழங்குவதாக தெரிவித்தேன். இதனால், என்னை திருச்செந்தூர் கும்பாபிஷேக பாதுகாப்புப் பணிக்கு அனுப்பிவைத்தனர். அதன்பிறகு, முதல்வர் வருகை பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
அந்தப் பணியை முடித்துவிட்டு திரும்பியபோது, அமைச்சர் பாதுகாப்பு பணிக்கு எனது வாகனத்தை தருமாறு மீண்டும் கேட்டனர். அந்த வாகனம் அவ்வப்போது பழுதாவதாக கூறியதையும் கேட்காமல், கடந்த 10-ம் தேதி வாகனத்தை வாங்கிக்கொண்டனர். இதுவரை அந்த வாகனத்தை திரும்ப வழங்கவில்லை. இதனால் 2 நாட்களாக அலுவலகத்துக்கு நடந்தே சென்றேன்.
நான் பொறுப்பேற்றது முதல் சாராயம், புதுச்சேரி மது விற்பனையை கட்டுக்குள் கொண்டு வந்ததால், சிலரது வருமானம் பாதிக்கப்பட்டுவிட்டது. நான் நேர்மையாக இருப்பதால் பல்வேறு சிக்கல்களை அனுபவிக்கிறேன். மனித உரிமை ஆணையத்தில் பணியாற்றியபோது, ஒரு வழக்கில் தொடர்புடைய காவல்துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்ததால், என்னைப் பழிவாங்குகிறார்கள்’ என்றார்.
மேலும், இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், காவல் ஆய்வாளர் பாலசந்தர் ஆகியோர் மீது சுந்தரேசன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து சுந்தரேசனின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், மாவட்டக் காவல்துறையில் இருந்து அழுத்தம் தரப்படுவதாக அவர் கூறியது தவறான தகவல் என்றும் விளக்கமளித்தார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் தன் மீது சுந்தரேசன் அவதூறு கருத்து தெரித்ததாகக் கூறி சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை முன்வைத்து தஞ்சை சரஜ டிஐஜி ஜியாஉல் ஹக் விசாரணை நடத்தி, சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக ஐஜிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.