அமைச்சர் மா. சுப்பிரமணியம்
அமைச்சர் மா. சுப்பிரமணியம்@Subramanian_ma

உடல் பருமன் சிகிச்சையில் உயிரிழந்த இளைஞர்: விசாரணை குழு அமைப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இரண்டு நாள்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Published on

உடல் எடையை குறைக்க வேண்டுமென அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை டிவி நகரைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உடல் பருமன் காரணமாக, சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 23 அன்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்கச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து ஹேமசந்திரனின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், இரண்டு இணை இயக்குநர்கள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து இரண்டு நாள்களில் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in