
தேர்தல் பிரசாரத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான்.
தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு முடிவடைந்த நிலையில், அவர் நேற்று காலை ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். குடியாத்தம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டார்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
“நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி வந்தபோது கட்டாயப்படுத்தி எனக்கு பழச்சாறு வழங்கப்பட்டது. இதன் பிறகு மோர் கொடுத்தார்கள். அதனை குடித்த உடனே வண்டியில் இருந்து கீழே விழ பார்த்தேன். அதனால் மயக்கம் வந்தது, அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி.
இதன் பிறகு குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும் வலி குறையவில்லை, அதனால் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டேன். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பின்பு வலி குறைந்துள்ளது. விஷ முறிவு மற்றும் நுரையீரல் வலி போவதற்கு ட்ரிப்ஸ் கொடுத்தார்கள். இன்று மதியம் சாதாரண வார்டுக்கு மாற்றுவதாகக் கூறினர்” என்றார்.