மாஞ்சோலை தொழிலாளர்கள் குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டாம்: தனியார் நிறுவனம்

தொழிலாளர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது
மாஞ்சோலை தொழிலாளர்கள் குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டாம்: தனியார் நிறுவனம்
ANI

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்ய வேண்டாம் என்று தனியார் நிறுவனம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தை தனியார் நிறுவனமான `பாம்பே பர்மா வர்த்தக நிறுவனம்’ 99 வருடங்கள் குத்தகைக்கு எடுத்தது. இந்த குத்தகை ஒப்பந்தம் 2028 பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

ஆனால் குத்தகை முடியும் முன்பே, குத்தகை எடுத்த தனியார் நிறுவனம், இத்தனை வருட காலம் தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்து வந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை அளித்து அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டது. மேலும் ஆகஸ்ட் 7-க்கும் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் சுற்றறிக்கை அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, தேயிலைத் தோட்டத்திலிருந்து வெளியேற்றும் முன்பு தங்களுக்கு மறு வாழ்வு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டி மாஞ்சோலையில் இருக்கும் அமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடுத்தார்.

`இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். அதுவரை தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முன்பு வழங்கப்பட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாகவும், 25% கருணைத் தொகை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகவும், மீதி 75 % கருணைத் தொகையை 3 நாட்களில் நாகர்கோவிலில் இருக்கும் தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் ஒப்படைப்பதாகவும், மறு உத்தரவு வரும் வரை தொழிலாளர்கள் அங்கிருந்து காலி செய்ய வேண்டாம் என்று புதிய சுற்றறிக்கை அனுப்பியுள்ளது தனியார் நிறுவனம்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in