
மதிமுகவிலிருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுக முதன்மைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ கடந்த 2024-ல் பொறுப்பேற்றார். இதன்பிறகு, துரை வைகோ மற்றும் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன.
ஒருகட்டத்தில் முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் துரை வைகோ. துரை வைகோவின் ராஜினாமாவுக்கு மல்லை சத்யாவே காரணம் எனக் கூறப்பட்டது.
அடுத்து நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ தலையிட்டு, இருவரையும் சமாதானம் செய்து வைத்தார்.
இருந்தபோதிலும், மல்லை சத்யாவுக்கு எதிரான கருத்துகள் மதிமுக வட்டாரங்களில் நிலவி வந்தன. கடந்த ஜூலையில் சமாதானம் செய்து வைத்த வைகோவே, மல்லை சத்யா மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததைப்போல, மல்லை சத்யா தனக்குத் துரோகம் செய்ததாக வைகோ கூறினார்.
மல்லை சத்யாவும் கடந்த ஆகஸ்ட் 2 அன்று சென்னை சிவானந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு துரை வைகோ மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதன் காரணமாக, கட்சியின் சட்டத் திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மல்லை சி.ஏ. சத்யாவைக் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைத்து வைகோ உத்தரவிட்டார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து மல்லை சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாக வைகோ உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது உத்தரவில் வைகோ குறிப்பிட்டுள்ளதாவது:
"சி.ஏ. சத்யா ஆகிய தாங்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்தும், தங்களை நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என 17-08-2025 அன்று விளக்கம் கேட்டு கட்சியின் சட்டதிட்டங்கள் படி - நான் அறிவிப்பு வழங்கியிருந்தேன்.
அந்த அறிவிப்பை, 19-08-2025 அன்று பெற்றுக் கொண்டு தாங்கள் அளித்துள்ள, 24-08-2025 தேதியிட்ட பதில் அறிவிப்பு, மின்னஞ்சல் மூலமாகவும், 27-08-2025 அன்று பதிவு அஞ்சல் மூலமாகவும் கிடைக்கப் பெற்றேன். தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மதிமுகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
பதில் அறிவிப்பில் குற்றச்சாட்டுக்களை நீங்கள் மறுக்கவில்லை. குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமும் அளிக்கவில்லை. தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பு ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட முகாந்திரமாக இல்லை. தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கானப் பதில் முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. தங்கள் மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படுகிறது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவின் கொள்கை குறிக்கோள், நன்மதிப்பு, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கேடு விளைவிக்கும் வகையில், பொதுவெளியில் கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டு, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 2-ன் படி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றம் புரிந்து, கழக சட்ட திட்டங்கள் விதி-35 பிரிவு 6-ன் படி, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கும் தங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின், சட்ட திட்டங்கள் விதி-19, பிரிவு-5, விதி-19, பிரிவு-12, விதி-35, பிரிவு-14, விதி-35, பிரிவு-15 இன் படி துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கழகத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற தகுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கி அறிவிக்கிறேன்" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை எதிர்பார்த்ததாகக் கூறும் மல்லை சத்யா, வைகோ ஜனநாயகப் படுகொலையைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Mallai Sathya | MDMK | Vaiko | Durai Vaiko |