பாஜகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.பி. மைத்ரேயன்.
1991-ல் பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும், மாநில துணைத் தலைவராகவும் செயல்பட்டார்.
இதன் பிறகு 2000-ம் ஆண்டில் இவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், 2002 முதல் 3 முறை மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவி வகித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்த மைத்ரேயன், பின்னர் இபிஎஸ் அணிக்கு சென்றார்.
அதிமுகவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் செய்த இவர், கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது பாஜகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் மைத்ரேயன்.
இது குறித்த தனது எக்ஸ் பதிவில்: “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று என் தாயின் கழகத்திற்கு மீண்டும் திரும்பி விட்டேன். இணைய வாய்ப்பளித்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி” என்று மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.