கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த என்.சி.சி முகாமில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான முக்கியக் குற்றவாளியான போலி என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன் உயிரிழப்பு.
கடந்த ஜூலை 11-ல் சிவராமன் ஏற்கனவே எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்து காவல்துறையினர் அழைத்து வரும்போது தப்பியோட முயன்றபோது சிவராமனுக்குக் கால் முறிந்தது.
இதனால் முதலில் கிருஷ்ணகிரியில் சிகிச்சை பெற்ற சிவராமன், பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) காலை 5.30 மணி அளவில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தகவலளித்துள்ளார்.
தன்னை வழக்கறிஞர் என்று கூறி சக்திவேல் என்பவரிடம் ரூ. 36.60 லட்சம் மோசடி செய்ததாக சிவராமன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகிரி காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் சிவராமனின் தந்தை அசோக்குமார் நேற்று நள்ளிரவில் காவேரிப்பட்டினம் பகுதியில் குடிபோதையில் கீழே விழுந்து தலையில் காயம் பெற்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.