ஜாமின் மனுவைத் திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் வழக்கிலிருந்து விலகியுள்ளார்.
படம்: https://www.facebook.com/paramporulfoundation
படம்: https://www.facebook.com/paramporulfoundation
1 min read

அரசுப் பள்ளிகளில் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மகாவிஷ்ணு, பிணை கோரி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளார்.

பரம்பொருள் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்தினார். இரு பள்ளிகளிலும் இவர் அறிவியலுக்குப் புறம்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.

சைதாப்பேட்டை அரசுப் பள்ளியில் இதைத் தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் என்பவரை மரியாதை குறைவாக நடத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பூதாகரமானது. இவர் மீது சைதாப்பேட்டை, திருவொற்றியூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன.

இதனிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சனிக்கிழமை பிற்பகல் சென்னை வந்த மகாவிஷ்ணுவைக் காவல் துறையினர் கைது செய்தனர். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவரை செப்டம்பர் 20 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்படி, மகாவிஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் காவல் நிலையத்திலும் மகா விஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவரை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மகாவிஷ்ணு தரப்பில் பிணை கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது, காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கூறிய மகாவிஷ்ணு, தனது ஜாமின் மனுவைத் திரும்பப்பெற்றார்.

மகாவிஷ்ணு தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் வழக்கிலிருந்து விலகியுள்ளார். வழக்கில் தானே வாதாடிக் கொள்வதாக மகாவிஷ்ணு நீதிபதியிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in