என் மதத்தையும், சாதியையும் தெரிந்துகொள்ள மகாவிஷ்ணு முயற்சித்தார்: ஆசிரியர் சங்கர்

என் மதத்தையும், சாதியையும் தெரிந்துகொள்ள மகாவிஷ்ணு முயற்சித்தார்: ஆசிரியர் சங்கர்

ஹிந்து மதக் கொள்கைகளை அவர் பேசினார். பள்ளிக்கூடம் என்பது சமத்துவம் நிலவும் இடம், இதில் குறிப்பிட்ட மதம் சார்ந்து பேசிவதை நான் அனுமதிக்கமாட்டேன் என்றேன்
Published on

மகாவிஷ்ணுவின் சொற்பொழிவுக்குத் தாம் ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து, அவர் தன்னுடைய மதத்தையும், சாதியையும் தெரிந்துகொள்ள முயற்சித்தார் என்று சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. காணொளியில் சங்கர் பேசியவை பின்வருமாறு:

`நடைமுறைக்கு ஒவ்வாத விஷயங்களை அவர் (மகாவிஷ்ணு) பேசினார். முற்பிறவி, மறுபிறவி போன்றவை குறித்துப் பேசினார். அது எனக்குப் பிடிக்கவில்லை, எனவே அவ்வாறு பேசக்கூடாது என்று கூறினேன். முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவாகத்தான் மனிதர்கள் பார்வையில்லாமல் பிறக்கிறார்கள். கண் இல்லாமல் கால் இல்லாமல் பிறக்கிறார்கள் என்று அவர் பேசினார். தனிப்பட்ட முறையில் அவர் பேசியது என்னைக் காயப்படுத்தியது.

தைரியமாகக் கேட்டிருக்கிறீர்கள், துணிச்சலாகப் பேசியிருக்கிறீர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார். எங்களுக்குத் தைரியம் இல்லை, ஆனால் நீங்கள் தைரியமாகக் கேட்டுவிட்டீர்கள் என்று சக ஆசிரியர்கள் என்னைப் பாராட்டினார்கள்.

ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை அவர் கேவலப்படுத்தினார். முற்பிறவியில் நாம் என்ன செய்தோம் என்பது யாருக்குமே தெரியாது. முதலில் முற்பிறவி என்பது உண்மையா என்பதே தெரியாது. ஹிந்து மதக் கொள்கைகளை அவர் பேசினார்.

பள்ளிக்கூடம் என்பது சமத்துவம் நிலவும் இடம். இதில் குறிப்பிட்ட மதம் சார்ந்து பேசிவதை நான் அனுமதிக்கமாட்டேன் என்றேன். பதிலுக்கு அவர் என்னுடைய மதத்தையும், சாதியையும் தெரிந்துகொள்ள முயற்சித்தார். அதை நான் கடைசி வரைக்கும் வெளிப்படுத்தவில்லை’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in