
அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த மகாவிஷ்ணு அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை செய்தியாளர்கள் சந்திப்பில் முன்வைத்துள்ளார் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியவை பின்வருமாறு:
`அரசுப் பள்ளியில் ஒரு நபர் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியுள்ளார். எப்படி அரசுப் பள்ளியில் இதை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஏன் இப்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள் என்று அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அந்த நபர் அவரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளை மனிதநேயத்தோடு, மனசாட்சியுடன் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட நபர்களால் மாற்றுத்திறனாளிகளின் மனம் காயப்படுவது கண்டனத்துக்குரியது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த இந்த நபர் அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரைச் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் சில அமைச்சர்களுடன் அவர் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த நபர் அரசின் செல்வாக்கை பயன்படுத்தி பள்ளியில் இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பது கண்டனத்துக்குரியது’ என்றார்.
புகைப்படம் தொடர்பாக இன்று காலை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், `ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானவர்களைச் சந்திக்கிறேன். அவர்கள் என்னுடம் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொண்டதால் பள்ளியில் அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறப்படும் செய்தி தவறானது’ என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.