
ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் அனுப்பிய கடிதத்தை மேற்கோள்காட்டி, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள் முடக்கப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தன் எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் இன்று (மே 31) வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`ரயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதி தொடர்பான விவரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகுதான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்துவிட்டு `தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள்’ என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள்.
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வெறும் ரூ. 1,000 தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும், எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ஏன் மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர், ரயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துள்ளது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்று ஆகிவிட்டது.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 26.9.2019 அன்று ரயில்வே வாரியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கயதாகவும் (freeze), அந்த திட்டங்களுக்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் அவற்றை திருப்பி (surrender) அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய ரயில்பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளதால், அந்த இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூ. 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார்.
வேறு சில திட்டங்களை (திருநாவையா-குருவாயூர் மற்றும் அங்கமாலி-சபரிமலை) முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்க அவர் கோரியுள்ளார். ஈரோடு-பழனி புதிய ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த முடியாததால் அதனைக் கைவிடவேண்டும் என்றும், அதற்காக ஒதுக்கிய ரூ. 50 கோடியை சரண்டர் செய்வதாக எழுதியுள்ளார்.
மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய ரயில்பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்.
ராமேஸ்வரம்-தனுஷ்கோடி புதிய ரயில்பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிடவேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது. அதனால் அந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ. 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.
மூன்று இரட்டை ரயில்பாதை திட்டங்களான காட்பாடி-விழுப்புரம்; சேலம்-கரூர்-திண்டுக்கல்; ஈரோடு-கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில்தான் உள்ளன, எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே ரூ. 200 கோடி, ரூ. 100 கோடி மற்றும் ரூ. 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன்? என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் மத்திய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள்.
தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு முடக்கியுள்ளதை மறைக்கவே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தவில்லை என்று ரயில்வே அமைச்சகம் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்ததை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோருகிறேன்’ என்றார்.