கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: இறுதியானது ஒப்பந்தம்!

மதுரை, திண்டுக்கல், திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கீடு.
கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: இறுதியானது ஒப்பந்தம்!

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா இரு இடங்களில் போட்டியிடுகின்றன. இதுதொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தம் இறுதியான நிலையில், எந்தத் தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்புடைய ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளார்கள். கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் திமுக கூட்டணியில் மதுரை (சு. வெங்கடேசன்) மற்றும் கோவையில் (பி.ஆர். நடராஜன்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். கடந்த முறை திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வேலுசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள். கடந்த மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இந்த இரு தொகுதிகளிலேயே இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக கடந்த முறை மக்களவைக்குத் தேர்வானவர்கள் கே. சுப்பராயன் மற்றும் எம். செல்வராஜ்.

திமுக கூட்டணி:

திமுக - 21 தொகுதிகள்

காங்கிரஸ் - 10 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (மதுரை, திண்டுக்கல்)

இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள் (திருப்பூர், நாகப்பட்டினம்)

விடுதலைச் சிறுத்தைகள் - 2 தொகுதிகள் (சிதம்பரம், விழுப்புரம்)

மதிமுக - 1 தொகுதி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 தொகுதி (ராமநாதபுரம்)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 தொகுதி (நாமக்கல்)

இதுதவிர, இந்தக் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் வகையிலும், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கும் வகையிலும் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in