மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டிமுடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசுக்குக் கேள்வியெழுப்பியுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. எப்போது எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வியெழுப்பியுள்ளது.
கொரோனா தொற்று வந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளதையடுத்து, 2026-க்குள் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு, கொரொனா 2022-ல் முடிந்துவிட்டதால், அதைக் காரணம் காட்ட வேண்டாம் என்று கூறிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை மத்திய சுகாதாரத் துறைச் செயலர் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டுவதற்காக 2019-ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன்பிறகு, இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 4, 2024-ல் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.