டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராகத் திரளும் கர்நாடக இசை உலகம்!

டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியூஸிக் அகாதெமியில் நடைபெறும் 2024 இசை மாநாட்டில்...
டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராகத் திரளும் கர்நாடக இசை உலகம்!

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீதக் கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மியூஸிக் அகாதெமியில் நடைபெறும் 2024 இசை மாநாட்டில் பங்கேற்காமல் விலகுவதாகப் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரஞ்சனி மற்றும் காயத்ரி இருவரும் தெரிவித்தார்கள். இதையடுத்து கர்நாடக இசை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு தலைமை வகிக்க டி.எம். கிருஷ்ணாவுக்கு தார்மிக உரிமை ஏதும் இல்லை. கர்நாடக இசை உலகிற்கு கிருஷ்ணா கடும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து ரஞ்சனியும், காயத்ரியும் கூறுகையில், "மியூஸிக் அகாதெமியின் மாநாடு 2024-ல் பங்கேற்பதிலிருந்தும், டிசம்பர் 25 அன்று எங்கள் இசை நிகழ்ச்சியை நடத்துவதிலிருந்தும் விலகி இருக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். டி.எம். கிருஷ்ணா தலைமையில் மாநாடு நடைபெறும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

டி.எம். கிருஷ்ணா, கர்நாடக சங்கீத உலகிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர், இந்தச் சமூகத்தின் உணர்வுகளை மதிக்காதவர், மேலும் தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற ஜாம்பவான்களையும் அவமதித்துள்ளார். ஆன்மிகம் தொடர்புடைய இசையை இழிவுபடுத்தும் வகையிலேயே அவர் செயல்பட்டு வந்துள்ளார். கர்நாடக இசை உலகிற்கு பங்களித்து வரும் லட்சக்கணக்கான நபர்களின் கடின உழைப்பையும் கலைத்திறனையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்டுள்ளார்.

பார்ப்பனர்கள் இனப்படுகொலையை வெளிப்படையாக முன்மொழிந்தது, இந்தச் சமூகத்தின் பெண்களைத் தூஷித்தது, சமூகத்தின் உரையாடல்களை மோசமான வார்த்தைகளால் இயல்பாக்க முற்பட்டது எனப் பல்வேறு செயல்களில் ஈடுபட்ட "ஈ.வெ.ரா போன்ற ஒரு ஆளுமையைப் போற்றும் டி.எம். கிருஷ்ணாவின் செய்கையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆபத்தானது என அவர்கள் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.

"கலை மற்றும் கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், நிறுவனங்கள், எங்கள் வேர்கள் மற்றும் கலாசாரத்தை மதிக்கும் ஒரு மதிப்புமிக்க அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இந்த விழுமியங்களைப் புதைத்துவிட்டு இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் நாங்கள் தார்மீக மீறலுக்கு ஆளாவோம்" என்று இசைக்கலைஞர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

பிற இசைக் கலைஞர்களான விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர், ரவிகிரண் ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் தங்களுக்கு வழங்கப்பட்ட சங்கீதக் கலாநிதி விருதை திருப்பித் தரப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சனி - காயத்ரிக்கு மியூஸிக் அகாதெமி தலைவர் பதில்

பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய இசைக் கலைஞர்களான ரஞ்சனி- காயத்ரிக்கு மியூஸிக் அகாதெமி தலைவர் முரளி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடித்ததில், “மார்ச் 20, 2024 தேதியிட்ட உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றேன், அதில் சக மூத்த இசைக்கலைஞருக்கு எதிராக தேவையற்ற கருத்துகள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

ஆண்டுதோறும் சென்னையில் இருக்கும் மியூஸிக் அகாதெமி தரப்பில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்படுவது வழக்கம். கர்நாடக இசைத் துறையில் ஒருவர் ஆற்றிய பங்களிப்புக்கு ஏற்ப இந்த விருது வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது கர்நாடக இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணாவிற்கு வழங்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு மியூஸிக் அகாதெமி மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்குகிறார்.

1942-ல் தி மியூஸிக் அகாதெமியால் நிறுவப்பட்ட “சங்கீத கலாநிதி” விருது கர்நாடக இசையின் மிக உயரிய விருது என்பதை நீங்கள் அறிவீர்கள். சங்கீத கலாநிதியின் தேர்வு ஆண்டுதோறும் மியூஸிக் அகாதெமியின் தனிச்சிறப்பாகும், மேலும் இது எப்போதும் கவனமாக ஆலோசித்த பின்னரே தீர்மானிக்கப்படுகிறது.

இசைத் துறையில் நீண்ட காலம் பங்காற்றியவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அகாதெமியின் செயற்குழு டி.எம். கிருஷ்ணா தனது இசை வாழ்க்கையில், இசையில் சிறந்து விளங்கியதன் அடிப்படையிலான தேர்வாகும். வெளிப்புறக் காரணிகள் எதுவும் எங்கள் தேர்வை பாதிக்கவில்லை.

நீங்கள் விரும்பாத, தகுதியற்ற, மோசமான ரசனை கொண்டதாக நீங்கள் கருதும் ஒரு இசைக்கலைஞரை அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ளதன் காரணமாக வரவிருக்கும் சங்கீத அகாதெமி மாநாட்டில் இருந்து விலகுவதற்கான உங்கள் முடிவை நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்கிறோம். நீங்கள் எனக்கும் அகாதெமிக்கும் அனுப்பிய கடிதத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளீர்கள். இது ஒழுக்கத்திற்கு மாறான நடவடிக்கையாகும். மேலும் உங்கள் கடிதத்தின் நோக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது.

பொதுவாக, நீங்கள் என்னிடமும், அகாதெமியிடமும் தெரிவிப்பதற்கு முன்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதால், அதற்கான பதிலை நாங்கள் அளிக்கத் தேவையில்லை. ஆனால், கர்நாடக சங்கீதத் துறையில் நீங்கள் ஆற்றிய பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கான பதில் அளிப்பதை, நான் மறுக்க விரும்பவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in