உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அரசு ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வர வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
உதயநிதி டி-ஷர்ட் விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
1 min read

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னத்துடன் கூடிய டி-ஷர்ட் அணிந்து பங்கேற்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னத்துடன் கூடிய டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் ஆகியவற்றை அணிந்து தமிழக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார் வழக்கறிஞர் சத்ய குமார். தன் மனுவில்,

`அரசு ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வர வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி அரசு ஆண் ஊழியர்கள் சட்டை, ஃபார்மல் பேன்ட், வேட்டி அணியலாம். ஆனால் திமுக சின்னமான உதயசூரியனை காண்பிக்கும் வகையிலான டி-ஷர்ட்களை அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் அணிந்து வருகிறார்.

திமுக சின்னத்தை அரசு நிகழ்ச்சிகளில் காண்பிப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறும் செயல். பொது ஊழியராக கடமை ஆற்றும்போது அவர் கட்சியின் சின்னத்தைக் காண்பிக்கும் உடையை அணியக்கூடாது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார் வழக்கறிஞர் சத்ய குமார்.

இன்று (அக்.29) இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, `அரசு ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா’ போன்ற கேள்விகளை எழுப்பி ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in