நாயக்கனேரி ஊராட்சியின் தலைவராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டதை இன்று (செப்.20) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
2021-ல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தமிழகத்தில் நடைபெற்றது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி ஊராட்சியின் தலைவராக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இந்துமதி என்பவர் ஒருமனதாகப் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். இந்துமதியின் தேர்வை ரத்து செய்யக்கோரி நாயக்கனேரியின் முன்னாள் ஊராட்சித் தலைவர் சிவகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. அப்போது `மலை கிராமமான நாயக்கனேரியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 66 சதவீதத்தினர் பழங்குடியின மக்கள். மீதமுள்ள 34 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இந்த ஊராட்சியில் மொத்தம் உள்ள 9 வார்டுகளில் 8 வார்டுகள் பழங்குடியினருக்கும், 1 வார்டு பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாயக்கனேரியில் ஊராட்சியில் ஒரு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் கூட கிடையாது. எனவே இந்த ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது சட்டவிரோதமானது. வேறு ஊரைச் சேர்ந்த இந்துமதியை முறைகேடாக நாயக்கனேரி வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்’ என்று மு. ஊராட்சித் தலைவர் சிவகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
மேலும் நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கியது மற்றும் இந்துமதியை ஊராட்சித் தலைவராக தேர்வு செய்தது, ஆகியவற்றை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றத்துக்குக் கோரிக்கை விடுத்தார் சிவகுமார் தரப்பு வழக்கறிஞர். இதற்கு ஆட்சேபனை தெரிவித்து வாதாடினார் இந்துமதி தரப்பு வழக்கறிஞர்.
இதை அடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளந்திரையன், நாயக்கனேரி ஊராட்சித் தலைவராக இந்துமதி தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்தார். மேலும் நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை 4 வாரத்துக்குள் பழங்குடியினர் அல்லது பொதுப் பிரிவுக்கு ஒதுக்கி புதிய ஊராட்சித் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.