அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுவுக்குத் தடையில்லை என்று கூறி ராமதாஸ் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவில் நீண்ட நாள்களாகக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இதன் நீட்சியாக இருவரும் போட்டி பொதுக்குழுக் கூட்டங்களை அறிவித்தார்கள்.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று காலை 10 மணிக்குப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். சென்னை அருகே மாமல்லபுரத்தில் ஆகஸ்ட் 9 அன்று காலை 11 மணியளவில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பொதுச்செயலர் வடிவேல் ராவணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9 அன்று நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸால் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட முரளி சங்கர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கட்சி விதிகளுக்கு முரணாகப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரை இன்று மாலை 5.30 மணிக்கு நீதிபதி அறையில் நேரில் வந்து சந்திக்குமாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டுக்கொண்டார்.
ராமதாஸ் உடல்நிலையைக் காரணம் காட்டி காணொளி வாயிலாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மாலை ஆஜரானார். அன்புமணி நேரில் ஆஜரானார்.
வழக்கு தொடர்பாக அன்புமணியிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. ராமதாஸிடம் காணொளி வாயிலாக அரை மணி நேரத்துக்கும் குறைவாகவே விசாரணை நடைபெற்றதாகத் தகவல் வெளியாகின.
விசாரணை முடிந்த பிறகு, அன்புமணி புறப்பட்டுச் சென்றார். சிறிது நேரத்திலேயே அன்புமணி தரப்பு வழக்கறிஞர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்தார். ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே நீதிபதியின் அறையில் இருந்ததால், அவருக்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து, அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமதாஸ் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, வாருங்கள் சொந்தங்களே என பொதுக்குழுக் கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்தார்.
எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புமணி பதிவிட்டுள்ளதாவது:
"சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நாளை காலை 11.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுவை நடத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாமல்லபுரம் கான்ஃபுளுயன்ஸ் அரங்கில் நாளை காலை 11,00 மணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெறும். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து நாளையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுப்போம். உங்கள் அனைவரையும் சந்திப்பதற்காகவும், ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காகவும் காத்திருக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே!" என்று அன்புமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Anbumani | Anbumani Ramadoss | PMK | Madras High Court | PMK General Body Meeting