
விகடன் இதழின் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பதைப் போன்றும், அவருடையக் கை மற்றும் கால்களில் விலங்கு அணிவிக்கப்பட்டதைப் போலவும் சித்தரித்து விகடன் இதழின் இணை இதழான விகடன் ப்ளஸ் இதழ் விமர்சன கார்ட்டூனை வெளியிட்டது. இது இதழின் அட்டைப் படமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்த கார்ட்டூனுக்கு கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. தமிழ்நாடு பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, விகடன் ப்ளஸ் இதழால் வெளியிடப்பட்ட கார்ட்டூன் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகனுக்குக் கடிதம் எழுதியிருந்தார். பிரெஸ் கவுன்சிலுக்கும் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பிப்ரவரி 15 அன்று விகடன் இணையதளப் பக்கம் மத்திய அரசால் முடக்கப்பட்டது.
இதை எதிர்த்து விகடன் குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் விகடன் இணையதளப் பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை முடக்கவும் விகடன் குழுமத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கார்ட்டூன் பின்னணி
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இதன் பகுதியாக சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கண்டறியப்பட்ட இந்தியர்கள் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இதனிடையே, அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இவ்விரு சம்பவங்களையும் இணைத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பதைப் போன்றும், அவருடையக் கை மற்றும் கால்களில் விலங்கு அணிவிக்கப்பட்டதைப் போலவும் சித்தரித்து விகடன் இதழின் இணை இதழான விகடன் ப்ளஸ் இதழ் விமர்சன கார்ட்டூனை வெளியிட்டது.