
தாதுமணல் கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப்.17) உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் தாதுமணல் உள்ளது. விதிகளுக்குப் புறம்பாக இங்கு தாதுமணல் அள்ளப்பட்டு வருவதாகப் பல ஆண்டுகளாகப் புகார் எழுந்த நிலையில், இப்பகுதியில் தாதுமணல் திருட்டு நடைபெற்றுள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தாதுமணலை எடுத்துள்ளதாகவும், கடந்த 2013-ல் அன்றைய தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார் கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆய்வு நடத்த அன்றைய வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்தது தமிழக அரசு. அதன்பிறகு கடந்த 2015-ல் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்த உயர் நீதிமன்றம் அமைத்த குழு, விசாரணையை முடித்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. வி.வி. மினரல்ஸ், ட்ரான்ஸ் வேர்ட்ல் கார்னெட், பீச் அண்டு மைனிங் உள்ளிட்ட 7 நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததாக அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று (பிப்.17) நடைபெற்ற விசாரணையில், தாதுமணல் எடுக்க அரசு தடை விதித்த பிறகும் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டது உறுதி ஆகியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதைப் புறந்தள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், இதில் நடைபெறுள்ள சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்ட 7 தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், சட்டவிரோதமாக எடுக்கப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.