
இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2022 ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ. பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
2023-ல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை வழங்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம். ஆனால் இரட்டை இலை சின்னம், பொதுக்குழு குறித்து நிலுவையில் உள்ள வழக்குகளின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
சூரியமூர்த்தியின் வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சூரியமூர்த்தியின் மனு மீது தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு முடிவுக்கு வரவேண்டும் எனவும் கடந்த டிச.4-ல் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இரட்டை இலை சின்னம் தொடர்பான தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தனர். இந்நிலையில், சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று (ஜன.9) நடைபெற்றது,
அப்போது, `இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்பி இரட்டை இலை விவகாரத்தில் முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு இன்று (ஜன.9) இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.