பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இயக்குநர் மோகன் ஜி-க்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்து திரைப்பட இயக்குநர் மோகன் ஜி அண்மையில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறான கருத்தைத் தெரிவித்ததாக, திருச்சி காவல் நிலையத்தில் மோகன் ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னையில் அவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, நீதிமன்றம் இவரை சொந்த ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, பழனி கோயில் பஞ்சாமிர்தப் பிரிவு கண்காணிப்பாளர், பழனி பஞ்சாமிர்தம் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்பியதாக அடிவாரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மோகன் ஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தான் அவதூறான கருத்துகளைப் பரப்பவில்லை என்று மோகன் ஜி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. "மனுதாரர் வாய்ச்சொல் வீரராக மட்டும் இல்லாமல், கருத்துகளைத் தெரிவிப்பதற்கு முன்பு அதை உறுதிப்படுத்த வேண்டும். பழனி கோயில் மீது உண்மையில் அக்கறை இருந்தால், பழனி கோயிலுக்குச் சென்று தூய்மைப் பணியில் ஈடுபடலாம் அல்லது பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படும் இடத்தில் 10 நாள்களுக்கு சேவையாற்றலாம்" என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், முன்ஜாமின் வழங்கிய நீதிபதி, "பழனி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்திருந்த சம்பந்தப்பட்ட யூடியூப் சேனலில் மன்னிப்புக் கேட்க வேண்டும். தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும்" என்று நிபந்தனை விதித்து மோகன் ஜி-க்கு முன்ஜாமின் வழங்கினார்.