
அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார், வழக்கில் இருந்து விலகியுள்ளார்கள்.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக், தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்கிறது. இந்த பணியின்போது தனியார் நிறுவனங்களுடன் இணைந்து டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில், மார்ச் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் தாளமுத்து-நடராசன் மாளிகையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கிடங்கிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
அத்துடன் தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இல்லங்களிலும், சில தனியார் மதுபான ஆலைகளிலும் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, சோதனை குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குறிப்பிட்டது. இதன்பிறகு இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் அமர்வு, எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடைபெற்றது என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்யுமாறும், அதுவரை இந்த விவகாரத்தில் எந்த ஒரு மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்கள்.
இந்நிலையில், வழக்கு விசாரணை மீண்டும் இன்று (மார்ச் 25) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து இரு நீதிபதிகளும் விலகியுள்ளனர்.