சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம்: சென்னை உயர் நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு!

அதிகாரம் படைத்த நபர்கள் அணுகினார்கள் - வழக்கை அவசரமாக விசாரித்தது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விளக்கம்.

சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது.

பெண் காவல் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரைக் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ல் உத்தரவிட்டார்.

சவுக்கு சங்கர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து, அவரை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், பி.பி. பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீதான இறுதி விசாரணை இன்றே நடைபெற்று, உத்தரவும் இன்றே பிறப்பிக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று தெரிவித்தார்.

இதன்படி, வழக்கானது இதே அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்கள்.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவில் காவல் துறை தரப்பில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்று கூறி, குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பி.பி. பாலாஜி உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனிடம் இந்த வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை சிறையிலுள்ள சவுக்கு சங்கரை உடனடியாக சென்னையிலுள்ள புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகளும் தீர்ப்பை வெளியிட்டுள்ளார்கள்.

சவுக்கு சங்கர் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரித்தது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளிப்படையாகக் கூறியதாவது:

"அதிகார பலம் படைத்த இருவர் என்னைச் சந்தித்து, ஆட்கொணர்வு மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்

என்று கேட்டுக்கொண்டார்கள். நான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி. சென்னையில் விடுமுறை அமர்வில் ஒரு வாரம் மட்டுமே நான் தலைமை வகிக்கிறேன்.

இந்த மனுவை விசாரிக்காவிட்டால் அரசியலமைப்புக் கடமையிலிருந்து தவறுகிறேன் என்று அர்த்தம். என்னைச் சந்தித்த நபர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

இதை அவசரமாக விசாரிப்பது ஏன் என்று அனைவரும் கேட்பதற்கு எதிராக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது இதனால்தான்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in