
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த பாஜகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்குக் காவல் துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து பாஜகவின் கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை நேற்றே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறிய சென்னை உயர் நீதிமன்றம் மனு மீது விசாரணை நடத்தியது.
அப்போது, யார் வேண்டுமானாலும் தேசியக் கொடியை ஏந்திச் செல்லலாம் எனவும், பேரணி செல்லும் இடங்களை அறிந்து வாகன நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் காவல் துறை பார்த்துக்கொள்ளலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதுதொடர்பாக பதிலளிக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில், தேசியக் கொடியை ஏந்திச் செல்வதைத் தடுக்கக் கூடாது என காவல் துறைத் தலைவர் அறிவிக்க வேண்டும். தேசியக் கொடியை எடுத்துச் செல்பவர்கள் அதன் கண்ணியம் குறையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வழியாகப் பேரணி செல்கிறது என்பதைக் கேட்டறிந்து, பேரணிக்கு ஏதுவான பகுதிகளில் அனுமதி வழங்க வேண்டும். வாகனப் பேரணியில் பங்கெடுப்பவர்கள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.