
வெளிநாடுகளிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ற மோசடி வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை சென்னை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். 1997 கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக டிசம்பர் 15, 1997 மற்றும் ஜூன் 20, 2000 காலகட்டத்தில் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, நிஸார் அஹமது, ஜிஎம் ஷேக் மற்றும் கலஞ்சிம் ஆகியோர் கோவை முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் வெளிநாடுகளிலிருந்து நிவாரண நிதியைப் பெற்றுள்ளார்கள். இதற்காக ரிசர்வ் வங்கி அல்லது மத்திய அரசிடமிருந்து முறையான அனுமதி எதையும் பெறவில்லை என்பது குற்றச்சாட்டு. இவர்கள் வெளிநாடுகளிலிருந்து ரூ. 1.54 கோடி நிதியைப் பெற்றுள்ளார்கள்.
இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் அனைவரும் குற்றவாளிகள் என 2011-ல் அறிவிக்கப்பட்டார்கள். ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உடந்தையாக இருந்த ஹைதர் அலிக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நிஸார் அஹமது, ஜிஎம் ஷேக் மற்றும் கலஞ்சிம் ஆகியோருக்கு இரு ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2017-ல் செசன்ஸ் நீதிமன்றத்தால் இந்தத் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
ரம்ஜான் புனித மாதம் என்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். மேலும், 30 நாள்களுக்குப் பிறகு மனுதாரர்கள் யாரும் உச்ச நீதிமன்றத்தை நாடி விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை அல்லது தீர்ப்பை ரத்து செய்வதற்கான உத்தரவைப் பெறாவிட்டால், சிபிஐ தீர்ப்பை நடைமுறைப்படுத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.